வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (12:38 IST)

பெண் மருத்துவர் படுகொலை.! நாடே வெட்கி தலைகுனிய வேண்டும்.! சீமான் கண்டனம்..!!

Seeman
மருத்துவர்களின் பாதுகாப்பை அந்தந்த மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோல்கட்டா அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மிகக்கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. உயிரிழந்த பெண் மருத்துவரின் குடும்பத்திற்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருவது வன்மையான கண்டனத்துக்குரியது.
 
ஏற்கனவே தெலுங்கானாவில் பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட நிலையில், தற்போது மேற்கு வங்கத்தில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உள்ளேயே பெண் மருத்துவர் படுகொலை செய்யப்படும் அளவிற்கு மருத்துவர்களுக்கு நாடு முழுவதும் பாதுகாப்பு இல்லாத சூழலே நிலவுகிறது. பாலியல் படுகொலை செய்யப்பட்ட மேற்கு வங்கப் பெண் மருத்துவரின் உடற்கூராய்வில் அவரது தலை முதல் கால் வரை பல இடங்களில் படுகாயங்கள் இருப்பதும், பற்களால் கடித்து இருப்பதும், கால்கள் செங்குத்தாக உடைக்கப்பட்டு இருக்கின்றன எனவும், தகவல் வெளியாகியுள்ளது.
 
கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய் மட்டுமே இக்கொடூரங்களை செய்திருக்க வாய்ப்பில்லை எனவும் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்றும் வெளியாகும் நெஞ்சைப் பதற வைக்கும் செய்திகள் யாவும் மிகுந்த அச்சத்தையும், மனவலியையும் கொடுக்கிறது. நாடே வெட்கி தலைகுனிய வேண்டிய இப்பெருங்கொடுமைக்கு எதிராக மருத்துவர்களும், மாணவர்களும் கொதித்தெழுந்து போராட்டம் நடத்தி வருவதையடுத்து, இவ்வழக்கு விசாரணை மத்திய குற்றப்புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க மாநில அரசும் முழு ஒத்துழைப்பு நல்கி உண்மையான குற்றவாளிகளையும், தொடர்புடையவர்கள் அனைவரையும் கைது செய்து கடும் தண்டனைக் கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் மருத்துவர்களின் பாதுகாப்பை அந்தந்த மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் எனவும்  சீமான் வலியுறுத்தி உள்ளார்.