செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 18 ஜூன் 2021 (21:29 IST)

அமெரிக்க பல்கலையின் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. முக ஸ்டாலின் அவர்கள், அமெரிக்க இலினொய் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் தலைவராக திரு. ராஜகோபால் ஈச்சம்பாடி அவர்கள் பொறுப்பேற்றதை முன்னிட்டு, வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:
 
இலினொய்‌ தொழில்நுட்பப்‌. பல்கலைக்‌ கழகத்‌ தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும்‌ தமிழரான திரு. ராஜகோபால்‌ ஈச்சம்பாடி அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.
 
அமெரிக்காவில்‌ உள்ள 131 ஆண்டுகள்‌ பழமையானதும்‌, உலகப்‌ புகழ்பெற்றதுமான தொழில்நுட்பப்‌ பல்கலைக்‌ கழகத்தின்‌ தலைவராகப்‌ பொறுப்பேற்கும்‌ முதல்‌ இந்தியர்‌ திரு. ராஜகோபால்‌ ஈச்சம்பாடி அவர்கள்‌ என்பதால்‌, தமிழர்களுக்கும்‌, தமிழ்நாட்டிற்கும்‌ மட்டுமின்றி இந்திய துணைக்கண்டத்திற்கே உலகளாவிய பெருமையை அவர்‌ பெற்றுத்‌ தந்திருக்கிறார்‌.
 
59 வயதாகும்‌ திரு. ராஜகோபால்‌ ஈச்சம்பாடி அவர்கள்‌ திருவாரூரில்‌ பிறந்து, சென்னையில்‌ பள்ளி மற்றும்‌ கல்லூரிப்‌ படிப்பையும்‌, அண்ணா பல்கலைக்‌கழகத்தின்‌ வளாகக்‌ கல்லூரியான கிண்டி பொறியியல்‌ கல்லூரியில்‌ தமது மேல்படிப்பையும்‌ பயின்றவர்‌.
 
வரும்‌ ஆகஸ்ட்‌ 16 அன்று இலினொய்‌ தொழில்நுட்பப்‌ பல்கலைக்‌ கழகத்‌தலைவராக பொறுப்பேற்க இருக்கும்‌ திரு. ராஜகோபால்‌ ஈச்சம்பாடி அவர்கள்‌, தொழில்நுட்பம்‌ மற்றும்‌ ஆராய்ச்சியில்‌ அண்ணா பல்கலைக்‌ கழகம்‌ மற்றும்‌ சென்னை ஐ.ஐ.டி.யுடன்‌ இணைந்து செயல்பட விரும்புவதாகத்‌ தெரிவித்திருப்பது, பிறந்த மண்‌ மீது அவர்‌ கொண்டுள்ள மதிப்புமிகு பற்றுதலின்‌ வெளிப்பாட்டைக்‌ காட்டுகிறது!
 
தமிழர்களின்‌ தொழில்நுட்ப அறிவின்‌ உலகளாவிய உயரத்திற்குச்‌ சான்றாக விளங்கும்‌ திரு. ராஜகோபால்‌ ஈச்சம்பாடி அவர்களுக்கு, தமிழ்நாட்டு மக்களின்‌ சார்பில்‌ எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை பெருமிதத்துடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.
 
தேமதுரத்‌ தமிழர்‌ புகழ்‌ திக்கெட்டும்‌ பரவட்டும்‌!
 
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.