செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 7 மார்ச் 2022 (08:38 IST)

தப்பை உணர்ந்து திருந்தாவிட்டால் நடவடிக்கை..! – திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

கூட்டணி கட்சிகளுக்கு வழங்கிய இடத்தை திரும்ப கொடுக்காத திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட நிலையில் நகராட்சி, பேரூராட்சி பதவிகள் சிலவற்றை கூட்டணி கட்சிகளுக்கு திமுக தலைமை ஒதுக்கி இருந்தது. ஆனால் அந்த பகுதிகளில் தலைமை அனுமதி இல்லாமல் சில திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

இதை கண்டித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கிய இடத்தில் போட்டியிட்ட திமுகவினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறியுள்ளார். ஆனாலும் பலர் ராஜினாமா செய்யாமல் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடியில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பேசியபோது எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “திமுகவினர் செய்த செயலுக்கு நான் மிகவும் வருந்துகிறேன். கண்டிப்பாக அவர்கள் தவறை அவர்கள் உணரவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும். ஏதோ அந்த கூட்டணி கட்சியில் இருப்பவர்களை திருப்திபடுத்துவதற்காகவோ அல்லது தவறு செய்தவர்களை மிரட்டுவதற்காகவோ அல்ல. நிச்சயமாக, உறுதியாக, அவர்கள் செய்த தவறை உணர்ந்து திருந்தவில்லை என்று சொன்னால் உரிய நடவடிக்கையை நிச்சயமாக நான் எடுப்பேன் என்பதை தலைவர் கருணாநிதி சிலையை திறந்து வைத்திருக்கும் இந்த நேரத்தில் உறுதியாக ஏற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.