அ.தி.மு.க. அரசும் நீதிமன்றத்தை நாட வேண்டும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
நீட் தேர்வை எதிர்த்து அதிமுக அரசு சுப்ரீம் கோர்ட்டை நாட வேண்டும் என்றும் நீட் தேர்வை எதிர்ப்பதாக நாடகமாடிய கொண்டிருக்கக் கூடாது என்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்
வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்படுவது உறுதி என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது இதனை அடுத்து இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது
நீட், ஜெ.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய ஏழு மாநில முதலமைச்சர்கள் முடிவு செய்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் செய்தியை மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும் வரவேற்கிறேன்.
கொரோனா என்ற கொடிய நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசு, ஏழை - எளிய பின்தங்கிய ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாக அமையும் இத்தகைய தேர்வுகளை நடத்துவதில் மட்டும் மும்முரமாக இருப்பதை ஏழு மாநில அரசுகள் எதிர்ப்பதை இந்திய நாடே மனப்பூர்வமாக வரவேற்கும். பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர், புதுச்சேரி, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை ஆளும் முதலமைச்சர்களை மனமாரப் பாராட்டுகிறேன்; வணங்குகிறேன்.
இதற்கான முயற்சியை அக்கறையுடன் எடுத்த சோனியா காந்திக்கும் எனது நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
நீட் தேர்வை எதிர்ப்பதாகத் தொடர்ந்து நாடகம் ஆடி ஏமாற்றிக் கொண்டிருக்கும் தமிழக அ.தி.மு.க. அரசு, இப்போது என்ன செய்யப் போகிறது? நீட் தேர்வை எதிர்ப்பது உண்மையானால்; மாணவர்கள் மீதான அக்கறை உண்மையானால், தமிழக அரசும் மற்ற மாநில அரசுகளைப் போல உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும்.
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதே தி.மு.க.,வின் கொள்கை. இந்தக் கொரோனா பேரிடர் காலத்தில், அதுவும் அனைவரும் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கும் இந்தக் கட்டத்தில், மாணவ - மாணவியரைத் தேர்வுகள் மூலம் துன்புறுத்துவதை ஒத்திவைப்பதாவது, நீட் ரத்துக்கான தொடக்கமாக அமையட்டும் என தெரிவித்துள்ளார்