வட்டிக்கு வட்டி போடுவதா? கேட்டால் ஒளிந்து கொள்வதா? – விளாசிய நீதிமன்றம்!
கொரோனா ஊரடங்கு காலத்தில் வங்கிகள் கடன் வசூலித்தது குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்தியாவில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கால் மக்கள் பலர் வேலையிழந்ததால் வங்கி கடன் தவணைகளை செலுத்துவதற்கான காலம் நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும் வங்கிகள் ஊரடங்கு மாதங்களிலும் வட்டி செலுத்த சொன்னதாகவும், வட்டி கட்டாதவர்களுக்கு வட்டிக்கு மறு வட்டி போடப்பட்டதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் விரிவான விளக்கத்தை கோரியிருந்தது. இதுகுறித்த பதில் மனுவை மத்திய அரசு தாக்கல் செய்யாததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி கடன் விவகாரத்தில் மத்திய அரசு ரிசர்வ் வங்கி பின்னால் ஒளிந்து கொள்வதாக கூறிய உச்சநீதிமன்றம், ”உங்களது கடன் வசூலிக்கும் பணியை செய்ய இது நேரமல்ல.. தேவையான நிவாரணத்தை வழங்குவதும் அவசியம்” என தெரிவித்துள்ளது.