1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 3 நவம்பர் 2020 (12:02 IST)

இப்ப என்ன அவசரம்.. பொங்கல் முடிஞ்சு ஸ்கூல் திறக்கலாம்! – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகத்தில் நவம்பர் 16 முதல் பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பள்ளிகளை திறக்க வேண்டாம் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வில் நவம்பர் 16 முதலாக பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 16 பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டுள்ள நிலையில், பள்ளிகளை தற்போது திறக்கக்கூடாது என ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ”பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் அவசர கோலத்தில் முடிவெடுத்துள்ளார். பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள் பாதுகாப்பு, விடுதி வசதி, உணவு போன்றவற்றிற்கு போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா? உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா இரண்டாம் அலை பரவுவதாக கூறப்படும் நிலையை ஆய்வு செய்து இந்த முடிவு எடுக்கப்பட்டதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் தற்போது பருவமழை, சுற்றுசூழல் மாறுபாடுகள் ஆகியவை ஏற்படுவதால் இந்த சமயத்தில் பள்ளிகளை திறக்க வேண்டாம் என்றும், ஜனவரியில் பொங்கல் விடுமுறை முடிந்த பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து கலந்தாலோசிக்கலாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.