வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 டிசம்பர் 2019 (08:50 IST)

அதிமுகவிற்கு கணக்கு தெரியவில்லையா? – மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக நடத்திய பேரணியில் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள் என்பதில் ஆளுங்கட்சி குறைத்து மதிப்பிடுவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடந்த நிலையில், திமுகவும் தனது சார்பில் சென்னையில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். இதில் கலந்து கொண்ட 8 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு அவர்களின் 95வது பிறந்தநாள் விழா சென்னை தி.நகரில் உள்ள பாலன் இல்லத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் , நல்லக்கண்ணு அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

பிறகு பேசிய மு.க.ஸ்டாலின் ”கடந்த 23ம் தேதி மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஒரு பெரும் பேரணியை நடத்தி முடித்திருக்கிறோம். அதில் கலந்து கொண்ட 8 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிந்தேன். 8 ஆயிரம் பேர் மீது அல்ல, 8 ஆயிரம் வழக்குகள் போட்டாலும் அதை எதிர்கொள்ளும் திடம் எங்களுக்கு உள்ளது. அதிமுக அமைச்சர்களோ பேரணியில் 5 ஆயிரம் பேர்தான் கலந்து கொண்டனர் என்று கூறியுள்ளனர். பத்திரிக்கைகள் லட்சகணக்கானோர் கலந்து கொண்டதாக எழுதியுள்ளன. உளவுதுறையினர் ஆளுங்கட்சி கூட்டத்திற்கு 50 பேர் வந்தாலும் 200 என்று கணக்கு காட்டுவார்கள். எதிர்கட்சி என்றால் குறைத்து காட்டுவார்கள். அது அரசை குஷிப்படுத்துவதற்காக இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.