யோகி ஆதித்யநாத்துக்கு என்ன யோக்கியதை இருக்கு? – மு.க.ஸ்டாலின் கேள்வி!
தமிழகத்தில் திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என யோகி ஆதித்யநாத் பேசியதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி போட்டியிடும் நிலையில் பாஜக முக்கிய தலைவர்கள் பலர் தமிழகம் வந்து பல பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று தேர்தல் பரப்புரைக்காக கோவை வந்திருந்தார்.
அப்போது பேசிய அவர் தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் பெண்களுக்கு பாதுகாப்பில்லாமல் போய்விடும் என்ற ரீதியில் பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் “பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தில் பெண்கள் பாதுகாப்பின் லட்சணத்தை நாடே அறியும். அங்கிருந்து வந்த யோகி ஆதித்யநாத் திமுக பற்றியும், தமிழ்நாடு பற்றியும் பேச என்ன அருகதை இருக்கிறது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.