வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 31 மார்ச் 2021 (23:55 IST)

ஆயிரம் விளக்குத்தொகுதியில் குஷ்புவிற்கு அதிகரிக்கும் ஆதரவு!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாகவே கருத்துக்கணிப்பு என்ற பெயரில் சோசியல் மீடியாக்களில் கருத்து திணிப்புகளை பரப்பும் வேலைகள் நடந்து வருகின்றனர்.

இந்த தொகுதியில் வெல்லப்போவது யார்? இந்த சமூகத்தினரின் ஓட்டு யாருக்கு? என கவர்ச்சிகரமான தலைப்புகளுடன் வரும் கருத்துக்கணிப்புகளை எளிதில் நம்பக்கூடிய சூழ்நிலையில் தற்போது மக்கள் இல்லை. காரணம் கள நிலவரங்களையும், நமக்கு நல்லது செய்பவர் யார் என்பதையும் மக்கள் நன்கு உணர்ந்துகொண்டுள்ளனர்.
 
அப்படி சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் களமிறங்கியுள்ள குஷ்பு மீது பொய்யான பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. ஆயிரம் விளக்கு தொகுதிகளில் குஷ்புவிற்கு பெண்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், அவர் பாஜக சார்பில் போட்டியிடுவதால் இஸ்லாமியர்களின் வாக்குகள் கிடைக்காது என்ற வதந்தி பரப்பப்படுகிறது. ஆனால் கள நிலவரங்களின் படி இஸ்லாமிய சகோதரிகள் ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புவை தங்கள் வீட்டு பெண்ணாக நினைத்து கொண்டாடி வருகிறார்கள். 
 
இஸ்லாமிய பெண்களின் தேவையை அறிந்து வீட்டில் இருந்த படியே இஸ்லாமிய பெண்கள் தொழில் தொடங்க ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் என தன் தொகுதி மக்களுக்காக குஷ்பு பிரத்யேக வாக்குறுதியை கொடுத்துள்ளார். இந்த ஒரு வாக்குறுதிக்காகவே ஏராளமான இஸ்லாமிய பெண்கள் குஷ்புவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தங்கள் வீட்டு வாசல் வரை வந்து வாக்கு சேகரிக்கும் குஷ்புவை, வீட்டிற்குள் அழைத்து உபசரிப்பதோடு மட்டுமல்லாது, எங்கள் முழு ஆதரவும் உங்களுக்கு உள்ளது, சரியான இடத்திற்கு சரியான நேரத்தில் வந்துள்ளீர்கள் என வாழ்த்தி வருகின்றனர். நேற்று கூட பிரச்சாரத்திற்கு சென்ற குஷ்புவை ஆரத்தழுவி இஸ்லாமிய சகோதரிகள் சிறப்பான வரவேற்பு கொடுத்து அசத்தினர். அப்பகுதி பெண்கள் அனைவரும் மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். 
 
ஆனால் இதை திசைதிருப்பும் விதமாக இஸ்லாமியர்களின் ஆதரவு குஷ்புவிற்கு கிடையாது என்ற பொய்யான வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. 2016ம் ஆண்டு வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளை யாரும் மறந்திருக்க முடியாது. திமுக அதிக தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்றும், அதிமுக 5 இடங்களில் கூட வெற்றி பெறாது என்றும் கருத்துக்கணிப்புகள் வெளியாகின. ஆனால் அவர்களை எல்லாம் தலைகுனிய வைக்கும் அளவிற்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு அதிக தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது, இதுவே தற்போது குஷ்பு மீது பரப்பப்படும் கருத்து திணிப்புகளுக்கான சரியான பதிலடி.