திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 29 ஜூன் 2020 (08:07 IST)

நான் எந்தவித ஆலோசனையும் சொல்லவில்லையா? முக ஸ்டாலின் ஆவேசம்

சமீபத்தில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் அரசுக்கு எந்தவித ஆலோசனையும் சொல்லவில்லை என்றும், அவர் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருந்து அறிக்கைகளை மட்டும் வெளியிட்டு வருவதாகவும் கூறினார்.
 
முதல்வரின் இந்த குற்றச்சாட்டுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் ஆவேசமான பதிலளித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதியில் இருந்து அரசுக்கு ஆலோசனைகளை சொல்லி வருவதாகவும், இதுவரை 50க்கும் மேற்பட்ட அறிக்கைகள் வெளியிட்டுள்ளதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார். 
 
மேலும் கொரோனா பரவல் அதிகமாகி வரும் சூழலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இனிமேலாவது எனது ஆலோசனைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், தொற்றுப் பகுதியை மற்ற பகுதியில் இருந்து தனியாகப் பிரித்து, அரண் போலத் தடுக்க வேண்டும் என்றும், அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மக்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை அளிக்க வேண்டும் என்றும், கொரோனா பரிசோதனைகளை மாவட்ட வாரியாக வெளியிட வேண்டும் என்றும், மறைக்கப்பட்ட 236 மரணங்கள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளதாகவும் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆரோக்கியமான உணவுகள் கொடுக்க வேண்டும் என்றும், சித்த மருத்துவர்கள் சொல்லும் ஆலோசனைகளையும் கேட்க வேண்டும் என்றும் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.