புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 26 ஜூன் 2020 (11:36 IST)

மதிப்பெண் வழங்குவதில் குழப்பம்; கிரேடு முறை வழங்கலாமா? – ஆலோசனையில் கல்வித்துறை!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்கு பதிலாக கிரேடு முறையை அமல்படுத்த ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மாணவர்களுக்கு முந்தைய தேர்வு மதிப்பெண்கள் மற்றும் வருகை பதிவின்  அடிப்படையில் மதிப்பெண் வழங்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் பல பள்ளிகளிடம் விடைத்தாள்கள் இல்லாதது, முந்தைய தேர்வுகளில் மாணவர்கள் சரிவர தேர்வுகளை எழுதாதது உள்ளிட்ட பிரச்சினைகளால் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் மதிப்பெண்களுக்கு பதிலாக மாணவர்களுக்கு கிரேடிங் முறையை அளிப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

முந்தைய மதிப்பெண்கள், வருகைப்பதிவு உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு கிரேடு முறையில் மதிப்பெண் வழங்கினால் எண் மதிப்பெண் அளிக்கும் சிக்கல் ஏற்படாது என்று கல்வியல் ஆர்வலர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகே முடிவுகள் வெளியாகும் என கூறப்படுகிறது.