ஆன்லைன் வகுப்பு கிடையாது; டிவி மூலமாக வகுப்பு! – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படாது என்றும், டிவி வழியாக நடத்தவே திட்டமிட்டிருப்பதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளதால் 1 முதல் 10 வரை அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்த தொடங்கியுள்ள நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கான எந்த ஏற்பாடும் செய்யாமல் இருந்தது.
இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்க உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால் அனைத்து மாணவர்களிடமும் இணைய வசதிகள் இல்லாத சூழலில் ஆன்லைன் வகுப்பை எல்லா அரசு பள்ளி மாணவர்களும் படிக்க முடியாது என்ற கோரிக்கைகளும் எழுந்தன.
இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடம் நடத்துவதாக சொல்லவில்லை, தொலைக்காட்சி வழியாக நடத்ததான் திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் 12ம் வகுப்பு எச்சிய தேர்வுகள் குறித்து பேசிய அவர் பள்ளி வகுப்புகளில் 12வது கடைசி வகுப்பு என்பதாலும், அதில் பெறும் மதிப்பெண்கள் கல்லூரி சேர்க்கைக்கு அவசியம் என்பதாலும் 12ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.