12 ம் வகுப்பு ரிசல்ட் எப்போது? பாடத்திட்டம் குறைப்பா? – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!
தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்தான சூழலில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள், பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் 10 மற்றும் 11 வகுப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 12ம் வகுப்புகள் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும், பள்ளிகள் திறப்பு மற்றும் பாடத்திட்டங்கள் குறைப்பு உள்ளிட்டவை குறித்து பல்வேறு கேள்விகள் இருந்து வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ”12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும். கொரோனா காரணமாக பாடப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தாமதமாகியுள்ளது. இம்மாத இறுதிக்குள் புத்தகங்கள் தயாரான பின்னர் மாணவர்களுக்கு வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும்” என அவர் கூறியுள்ளார்.
மேலும் “தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்வது, மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை குறைப்பது உள்ளிட்டவை குறித்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சூழ்நிலை பொறுத்து பருவத்தேர்வுகள் ரத்து செய்யப்படலாம்” என்றும் அவர் கூறியுள்ளார்.