செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 20 ஜூன் 2019 (16:01 IST)

“மழை வருது.. மழை வருது.. குடை கொண்டு வா” – மழை பெய்ய வைக்க அமைச்சரின் புதிய ஐடியா

சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் “செயற்கை மழை பெய்ய வைப்பதன் மூலம் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

ஒரு அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் பாண்டியராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் “தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலுன் மக்களுக்கு அடிப்படை தேவையான தண்ணீர் கிடைக்க அனைத்துவிதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தை போக்க செயற்கை மழை பொழிய வைக்கவும் தமிழக அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது” என கூறியுள்ளார்.

இவரது இந்த பேச்சு இணையத்தில் காமெடியான விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. செயற்கை மழை பொழிய வைப்பதென்பது அவ்வளவு எளிதான வேலை அல்ல. மேலும் ஒரு முறை செயற்கை மழை பொழிய வைக்க ஆகும் செலவினங்கள் ஒருநாள் முழுக்க சென்னைக்கு தண்ணீர் விநியோகிக்க ஆகும் செலவை விட அதிகம் என சிலர் கூறுகின்றனர். மேலும் மேகங்களின் தன்மை, வெப்பசலன, காற்றின் திசை ஆகியவற்றை பொருத்து மழை பெய்யும் இடங்கள் மாறலாம் என்பதால் துல்லியமாக ஒரு இடத்தில் மழையை பெய்ய வைக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. இவைத்தவிர்த்து துபாய் போன்ற சில நாடுகளே செயற்கை மழையை சாத்தியம் ஆக்கியுள்ளன. இந்தியா போன்ற நாடுகள் இன்னமும் செயற்கை மழை பெய்ய வைப்பதன் சோதனை முயற்சிகளில் கூட முன்னேற்றம் காணவில்லை என கூறப்படுகிறது.

தண்ணீர் பிரச்சினைக்கு சுற்றியிருக்கும் நீர் மூலங்களை கண்டறிந்து மக்களின் தேவையை பூர்த்தி செய்வதை விடுத்து, வராத மழைக்கு குடை பிடிக்க சொல்லி வாயில் வந்ததையெல்லாம் அமைச்சர் பேசி திரிவதாக வலைதளங்களில் கிண்டலடிக்கிறார்கள் நெட்டிசன்கள்.