காவி உடையில் வந்த திருவள்ளுவர்; கல்வி சேனலில் பரபரப்பு - அமைச்சர் விளக்கம்
தமிழக அரசின் கல்வி சேனலில் திருவள்ளுவர் காவி உடையணிந்திருப்பது போன்ற படம் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் செல்போன் உள்ளிட்ட வசதி இல்லாத மாணவர்கள் தொலைக்காட்சி மூலமாக பாடம் பயில தமிழக அரசு கல்வி தொலைக்காட்சி என்ற சேனல் மூலமாக பாடங்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில் கல்வி தொலைக்காட்சியில் தமிழ் பாடத்தில் திருக்குறள் பற்றி பாடம் நடந்தபோது அதில் காவி உடையணிந்த திருவள்ளுவர் படம் இடம்பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பாஜகவினர் திருவள்ளுவர் காவி உடையணிந்திருக்கும் படத்தை வெளியிட்டதால் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன் ”கல்வி தொலைக்காட்சியில் காவி உடையணிந்த திருவள்ளுவர் படம் இடம் பெற்றதில் உள் நோக்கம் இல்லை. தவறுதலாக அவ்வாறு ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. கவனத்திற்கு வந்ததும் அந்த படம் நீக்கப்பட்டு விட்டது” என விளக்கமளித்துள்ளார்.