திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 28 டிசம்பர் 2017 (14:38 IST)

பாஜகவுடன் கூட்டணி வைப்போம் - பகிரங்கமாக ஒப்புக்கொண்ட ராஜேந்திர பாலாஜி

பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது என அதிமுக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

 
நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளர் மதுசூதனனை 40, 707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த விவகாரம் அதிமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஜெ.வின் மறைவிற்கு பின் அதிமுகவை பாஜக மேலிடமே கட்டுப்பட்டிற்குள் வைத்திருக்கிறது என மக்கள் உணர்ந்துள்ளனர். அதனால் ஏற்பட்ட அதிருப்தியே ஆர்.கே.நகரில் எதிரொலித்ததாக கூறப்படுகிறது.  
 
இந்நிலையில், நேற்று மதுரையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டதில் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய செல்லூர் ராஜூ “பாஜகவுடன் அதிமுக இணக்கமாக இருப்பதால்தான் ஆர்.கே.நகரில் தோல்வியை தழுவியுள்ளோம்.  அதற்கான தண்டனையை அனுபவித்து விட்டோம். இனிமேல், பாஜகவுடன் ஒட்டும் வேண்டாம். உறவும் வேண்டாம் என்ற ஜெ.வின் நிலைப்பாடை கையில் எடுப்போம். பாஜகவை எதிர்த்ததால்தான் ஆர்.கே.நகரில் வசிக்கும் இஸ்லாமியர்கள் ஓட்டுகள் அனைத்தும் தினகரனுக்கு சென்றுவிட்டது” எனப் பேசியுள்ளார்.
 
ஆனால், அவருக்கு நேர் எதிரான கருத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் “பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது” என தெரிவித்தார். சில மாதங்களுக்கு முன்பு ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி “இரட்டை இலை சின்னம் நமக்கே கிடைக்கும். மோடி இருக்கும் வரை நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர் இரட்டை இலையை நமக்கு பெற்றுத்தருவார்” எனப்பேசி பரபரப்பை உண்டாக்கினார். தற்போதும் பாஜகவிற்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்துள்ளார்.
 
பாஜகவின் நிலைப்பாடு பற்றி அதிமுக அமைச்சர்களிடையே வெவ்வேறு கருத்து நிலவுவது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.