திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 6 மே 2024 (17:14 IST)

சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு உதவி: அமைச்சர் அன்பில் மகேஷ்

சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு வேறு பள்ளியில் படித்த சின்னத்துரை என்ற மாணவர் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 469 மதிப்பெண் எடுத்துள்ளதை அடுத்து அந்த மாணவரின் உயர்கல்விக்கு உதவி செய்வேன் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆண்டு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரி சக மாணவர்களால் தாக்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மாணவர் சின்னத்துரை வேறு பள்ளியில் பயின்றதாகவும் கூறப்பட்டது
 
இந்த நிலையில் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு வெளியாகியுள்ள நிலையில் இந்த தேர்வில் மாணவர் சின்னத்துரை 469 மதிப்பெண்கள் பெற்றதை அடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அல்லது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
 
நாங்குநேரியில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை பிளஸ் 2 பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்நிலையில் மாணவரை தொடர்புகொண்டு அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, 11.08.2023 அன்று நான் உறுதியளித்தபடி அவர் விரும்பும் கல்லூரியில் இணைவதற்கு உதவுவதாகவும், அவரின் உயர் கல்விக்கு அனைத்து வகையிலும் துணை நிற்பேன் என்றும் உறுதிப்படுத்தினேன். “கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம் - மு.க”
 
Edited by Mahendran