தேர்வு எழுதாத மாணவர்களை தேடி செல்லும் அதிகாரிகள்! – அமைச்சர் போட்ட ஆர்டர்!
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில் தேர்வு எழுதாத மாணவர்களை அதிகாரிகள் சென்று விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. பல லட்சம் மாணவர்கள் பங்கேற்று எழுதி வரும் இந்த தேர்வில் மார்ச் 13ம் தேதி நடந்த மொழிப்பாடமான தமிழ் தேர்வில் 50,674 மாணவர்கள் தேர்வு எழுத வராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து நேற்று நடந்த ஆங்கில மொழித் தேர்விலும் 49 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை என தெரிய வந்தது.
இதுகுறித்து இன்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கல்வித்துறை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 5.6% மாணவர்கள் மொழித்தேர்வுகளை எழுதவில்லை. அவர்களை மீதமுள்ள பிற தேர்வுகளை எழுத வைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா காலத்தில் ஏற்பட்ட வாழ்வாதார பாதிப்பு, வேலைக்காக இடம்பெயர்தல் உள்ளிட்ட பல காரணங்களால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் போனதாக தெரிய வந்துள்ளது.
ஒவ்வொரு தேர்வு முடிந்ததும் தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து அதற்கான காரணத்தை அறிய முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதாத மாணவர்களை ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசுவார்கள். இதில் பெற்றோரின் ஒத்துழைப்பும் மிக அவசியம்” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K