செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 19 ஜூன் 2020 (08:57 IST)

எனக்கு கொரோனாவே இல்ல; சாதாரண காய்ச்சல்தான்! – அமைச்சர் அன்பழகன் விளக்கம்!

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அமைச்சர் அன்பழகன் இதை மறுத்துள்ளார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என கூறப்பட்டு வந்தது. மேலும் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் கலந்து கொண்டதாகவும் இதனால் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத் துறை திட்டமிட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் அன்பழகன் தனக்கு கொரோனா இருப்பதாக வெளியான செய்தியை மறுத்துள்ளார். தனக்கு கொரோனா இல்லை எனவும், தான் தனிமைப்படுத்தப்படவில்லை என்றும் விளக்கமளித்துள்ள அவர், சாதாரண காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தற்போது குணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.