ஆவின் பால் அதிக விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை - அமைச்சர் மனோ தங்கராஜ்
ஆவின் பால் பாக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரித்துள்ளார்.
சென்னையில் வரலாறு காணாத மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று, இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், நாளையும் மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் அங்கிருந்து மக்கள் வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்று வருகின்றனர். முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு அரசுடன் இணைந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் உதவி செய்து வருகின்றன.
இந்த நிலையில், இன்று காசிமேடு பகுதியில் பால் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர் மக்கள்.
சென்னை நங்கநல்லூரியில் மழை நீர் வடிந்த இடங்களில் ஆவின் பால் வி நியோகம் தொடங்கப்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் பால் வாங்கிச் செல்கின்றனர்.
பால் விற்பனையாளர்களுக்கு வாகனம் மூலமாக பால் கொண்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முக்கிய தகவல் தெரிவித்துள்ளார்.
அதில், ''பொதுமக்கள் பால் பற்றி அச்சப்பட தேவையில்லை. பால் வி நியோகம் இல்லை என்றால் தகவல் தெரிவித்தால் உடனடியாக சீர் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இச்சூழலை பயன்படுத்தி, ஆவின் பால் பாக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் ''என்று எச்சரித்துள்ளார்.