வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 25 நவம்பர் 2023 (09:33 IST)

மன்னிப்பு கேட்க நாங்கள் சாவர்க்கார் பரம்பரை அல்ல! பெரியாரின் பேரன்கள்; அமைச்சர் மனோ தங்கராஜ்

MANO THANGARAJ
அமைச்சர் மனோ தங்கராஜ் 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என அண்ணாமலை கெடு விதித்திருந்த நிலையில் மன்னிப்பு கேட்க நாங்கள் சாவர்க்கார் பரம்பரை அல்ல! பெரியாரின் பேரன்கள் என அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

ரபேல் வாட்சு கட்டி ஆடுமேய்ப்பவரின் கதையை தான் கூறினேன். தம்பி அண்ணாமலை அவசரப்பட்டு முன்வந்து, நான் தான் அந்த #வடநாட்டுகைக்கூலி_அண்ணாமலை என்று கூறுவது ஏனோ?  குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்.

மன்னிப்பு கேட்காவிட்டால் என்ன, தலையை சீவி விடுவாயா? 48 மணி நேரம்.. மிரட்டலா? எனது கருத்தில் எள்ளளவும் மாற்றம் இல்லை. ஏனெனில் அது ஆதாரத்துடன் கூடியது. இது தமிழ்நாட்டு மக்கள் மற்றும் , பால் உற்பத்தியளர்களின் நலன் சார்ந்தது.
மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கார் பரம்பரை அல்ல! பெரியாரின் பேரன்கள்; கலைஞரின் உடன்பிறப்புகள்; தளபதியின் தம்பிகள்; தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்பவர்கள்! என கூறியுள்ளார்.

முன்னதாக தமிழக பாஜக  தலைவர் தனது சமூக வலைத்தளத்தில், ‘திரு மனோ தங்கராஜ்  அவர்களே, இன்றைய உங்கள் செய்தியாளர்கள் சந்திப்பில், வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்திற்கு எதிராக நான் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியிருந்தீர்கள்.  உங்களுக்கு 48 மணிநேரம் அவகாசம் தருகிறேன்.

ஊழல் திமுக அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ள தமிழக காவல்துறை மூலமாக விசாரித்து, நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களைப் பொதுவெளியில் வெளியிடவேண்டும். உங்களால் நிரூபிக்க முடியவில்லையெனில், தவறான தகவலை பகிர்ந்தமைக்கு மன்னிப்பு கோரி, உங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

நீங்கள் அமைச்சராக தொடர்வது, தமிழக மக்களுக்கும் ஆவின் நிறுவனத்திற்கும் பெரும் சாபக்கேடு’ என பதிவு செய்திருந்தார்.

Edited by Mahendran