செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 23 மார்ச் 2021 (08:52 IST)

மடியில் கனமில்லாததால் எங்களுக்கு வழியில் பயமில்லை – வாகன சோதனை குறித்து மக்கள் நீதி மய்யம் கண்டனம்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசனின் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை நடத்தியதற்கு கண்டனம் எழுந்துள்ளது.

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நடிகர் கமல்ஹாசன் அங்கு தங்கியிருந்து மக்களை நேரடியாகச் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். தமிழகத்தில் வாக்காளர்களுகு பரிசுபொருட்கள் விநியோகம் செய்வதைத் தடுக்க தேர்தல் ஆணையம் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.  இவர்கள் வாகனத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றிக் கொண்டுசென்றால் பறிமுதல் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் திருச்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சென்ற வாகனத்தை பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சம்பவம் பர்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் ‘எங்கள் கட்சித் தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்களின் பரப்புரை பயணத்தின் வேகத்தையும் எழுச்சியையும் கண்டு பதறிப்போன அடிமை அரசு, அவர் பயணத்தின் வழியெங்கும் பல்வேறு இடங்களில் வாகனங்களை மறித்து “சோதனை” என்ற பெயரில் இடையூறு கொடுத்து வருகின்றது.

மடியில் கனமில்லாததால் எங்களுக்கு வழியில் பயமில்லை என்றாலும், இது எங்கள் பிரச்சாரத்தின் வேகத்தை குறைக்க செய்யும் திட்டமிட்ட செயலாகத்தான் நினைக்க வேண்டியுள்ளது. ஆவின் வண்டிகளும், ஆம்புலன்ஸ்களும் பணம் கொண்டு செல்ல ஆளும் கட்சியினரால் பயன்படுத்தப் படுவதாக ஊடகங்கள் சொல்வதை கண்டுகொள்ளாத இந்த நீதியற்ற நிர்வாகம், நேர்மைக்கு அடையாளமான எங்கள் தலைவர் நம்மவர் அவர்களின் பயணத்திற்கு ஏற்படுத்தும் இடையூறினை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வரும் வாக்குப்பதிவு நாளில் இதற்கு தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்’ எனக் கூறியுள்ளார்.