ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது! மாஸ்க் போடாதவர்களை மடக்கி பிடிக்கும் மதுரை போலீஸ்
கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மாஸ்க் அணியாமல் பொதுவெளியில் திரிபவர்களை பிடிக்க மதுரை போலீஸார் சிசிடிவியை பயன்படுத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் மக்களை மாஸ்க் அணியுமாறும், சமூக இடைவெளி கடைபிடிக்குமாறும் தமிழக அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. தற்போது மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் என்று அறிவிக்கப்பட்ட நிலையிலும் மக்கள் காவலர்களை கண்டால் மட்டும் மாஸ்க் அணிந்து கொள்வது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறு பொதுவெளியில் மாஸ்க் அணியாமல் செல்பவர்களை பிடிக்க மதுரை போலீஸார் புதிய நடைமுறையை பின்பற்ற தொடங்கியுள்ளனர். அதன்படி மாஸ்க் அணியாமல் பெரியார் பேருந்து நிலையம், பாண்டி பஜார், தமிழ் சங்க சாலையில் செல்பவர்களை அங்குள்ள சிசிடிவி கேமராக தானாக படம்பிடித்து அப்பகுதியில் பணியில் உள்ள போக்குவரத்து காவலரின் செல்போனில் உள்ள செயலிக்கு அனுப்பும், அவர்களை அதை கொண்டு மாஸ்க் அணியாதவர்களை பிடித்து அபராதம் வசூலிக்கிறார்கள்.
இந்த திட்டம் போதிய அளவில் கை கொடுப்பதால் மதுரை முழுவதும் இந்த வசதி கொண்ட சிசிடிவி கேமராக்களை பொருத்தவும் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.