மனு அளிக்க வந்த மூதாட்டி; காரில் அழைத்து சென்ற கலெக்டர்! – அதிர்ந்து போன ஹவுஸ் ஓனர்!
மதுரையில் வயதான மூதாட்டியை ஹவுஸ் ஓனர் ஒருவர் வீட்டை விட்டு வெளியேற்றிய நிலையில் அதுகுறித்து விசாரிக்க மாவட்ட கலெக்டர் நேரில் வந்தது அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மதுரை கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாத்திமா சுல்தானா என்ற மூதாட்டி. இவர் கடந்த பல ஆண்டுகளாக செல்வராஜபுரத்தில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வந்த நிலையில் அந்த வீட்டின் உரிமையாளர் இவரை வீட்டை விட்டு வெளியேற்றியதுடன், அட்வான்ஸையும் தராமல் ஏமாற்றியுள்ளார். இதனால் பள்ளிவாசல் வளாகத்தில் தங்கி வரும் மூதாட்டி இதுகுறித்து மனு அளிக்க மதுரை கலெக்டர் அலுவலகம் சென்றுள்ளார்.
மதுரை ஆட்சியர் அன்பழகன் வெளியே கிளம்பிய போது ஓரமாக அமர்ந்திருந்த மூதாட்டியை கண்டதும் சென்று மனுவை வாங்கி விசாரித்தபோது மேற்கண்ட தகவல்களை மூதாட்டி கூறியுள்ளார். இதையடுத்து நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்த கலெக்டர் அன்பழகன், மூதாட்டியை தனது காரிலேயே அழைத்து சென்றுள்ளார்.
மூதாட்டி கலெக்டருடன் வந்து இறங்குவதை கண்ட செல்வராஜபுரம் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் போலீஸார் மூதாட்டியின் வீட்டு உரிமையாளரிடம் பேசிய நிலையில் அவர் மூதாட்டியின் அட்வான்ஸ் தொகையை திருப்பி அளிப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். பிறகு ஆட்சியர் அன்பழகன் தன்னிடம் இருந்த 5 ஆயிரம் ரூபாயை மூதாட்டிக்கு அளித்து ஆறுதல் சொல்லி சென்றுள்ளார். ஆட்சியரின் இந்த செயலுக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.