பாபா சின்னத்துக்கு பதிலா கிடைத்த பாட்ஷா சின்னம்!? – ரஜினி தொண்டர்கள் ஹேப்பி!
நடிகர் ரஜினிகாந்த் தொடங்கியுள்ள கட்சிக்கு மக்கள் சேவை கட்சி என பெயரிடப்பட்டுள்ளதாகவும் இருவிரல் முத்திரை சின்னம் கோரப்பட்ட நிலையில் வேறு சின்னம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கட்சி பெயர், சின்னம் உள்ளிட்டவை குறித்தும், கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவது குறித்து ரஜினிகாந்த் ஆலோசனை மேற்கொண்டார்.
அதற்கு பிறகு ரஜினி தொடங்கும் புதிய கட்சியின் பெயர் “மக்கள் சேவை கட்சி” என்று பெயரிடப்பட்டுள்ளதாக தற்போது அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு சின்னமாக பாபா திரைப்படத்தில் ரஜினி காட்டு இரட்டை விரல் சின்னம் கோரப்பட்டதாகவும் ஆனால் அதை மறுத்துள்ள தேர்தல் ஆணையம் அதற்கு பதிலாக ஆட்டோவை சின்னமாக வழங்கியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆன்மீக அரசியலுக்கு பாபா முத்திரை சரியான தேர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றம் ஏற்பட்டாலும், ஆட்டோ சின்னமும் ரஜினி மற்றும் ரஜினி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஒன்றே.. ரஜினி நடித்த பாட்ஷா திரைப்படத்தில் ஆட்டோ டிரைவராக அவர் நடித்த பிறகு பல ஆட்டோ ஓட்டுனர்கள் அவரது பாட்ஷா ஸ்டிக்கரை ஆட்டோவில் ஒட்டிக்கொண்டனர். இதனால் செண்டிமெண்டலாக ஆட்டோ சின்னம் கிடைத்தாலும் ரஜினி தொண்டர்களோடு அது தொடர்புடையது என்பதால் அவர்கள் ஆட்டோ சின்னம் கிடைத்தாலும் மகிழ்ச்சி என்ற நிலையிலேயே தொண்டர்கள் உள்ளனர்.