புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (11:19 IST)

துணைவேந்தர் நியமனம் - கல்வியை காவிமயமாக்கும் முயற்சியில் பாஜக?

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கர்நாடகத்தை சேர்ந்த சூரப்பாவை துணை வேந்தராக ஆளுநர் நியமித்துள்ளது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
ஜெ.வின் மறைவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசை, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்து, காயை நகர்த்தி வருவதாக கருத்து நிலவி வருகிறது. தமிழகத்தில் எப்படியாவது தாமரையை மலர வைக்க வேண்டும் என்கிற நோக்கத்திலேயே அனைத்து அரசியல் முடிவுகளும் எடுக்கப்படுகின்றன என்கிற புகாரும் எழுந்துள்ளது.
 
காவிரி மேலாண்மை விவகாரத்தில் கூட, கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டே மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 

 
இந்நிலையில், எரியும் விளக்கில் எண்ணெய் ஊற்றுவது போல், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக ஆளுநர் பன்வாரிலால் நேற்று நியமித்துள்ளார். இது கடும் கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
 
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின் “சூரப்பாவை நியமனம் செய்தது மண்ணின் மைந்தர்களாக உள்ள கல்வியாளர்களை இழிவுபடுத்தும் செயல். காவிரி விவகாரத்தில் தமிழகமே போர்க்கோலம் பூண்ட நிலையில், சூரப்பா நியமனத்தை ஏற்க முடியாது என்றும் தமிழக பல்கலைகழக வளாகங்களை காவி மயமாக்க வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.
 
ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்  ‘இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம். தமிழகத்தை காவிமயமாக்கவில்லை. கல்வி மயமாகவே மாற்ற நாங்கள் விரும்புகிறோம். விதிமுறை படியே சூரப்பா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என அவர் தெரிவித்தார்.
 
அந்நிலையில், கர்நாடகாவில் ஓட்டுகளை பெறவே அண்ணாபல்கலை துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார். ஒட்டுண்ணி அரசியல் சித்தாந்தத்தை தமிழகத்திலும் பாஜக செயல்படுத்தி வருகிறது என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.