1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 18 மார்ச் 2020 (08:19 IST)

அடித்து ஆடுங்கள் முதல்வரே ... எடப்பாடியைப் புகழ்ந்த கவிஞர் தாமரை !

தமிழ் வழியில் கல்வி கற்றவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை என அறிவித்துள்ளது விழா எடுத்துக் கொண்டாடப்பட வேண்டியது என கவிஞர் தாமரை தெரிவித்துள்ளார்.

பள்ளி மற்றும் கல்லூரியில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பில் 20 % இடஒதுக்கீடு வழங்கப்படும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழகம் முழுவதும் பாராட்டு கிடைத்துள்ள நிலையில் கவிஞர் தாமரை இதைப் பாராட்டியுள்ளார். இது சம்மந்தமாக அவரது பேஸ்புக்கில் எழுதிய பதிவு:-
அடித்து ஆடுகிறார் எடப்பாடியார். தமிழ்வழியில் கற்றவர்களுக்கு, அரசுப் பணிகளில் முன்னுரிமை எனும் அறிவிப்பு, விழா எடுத்துக் கொண்டாட வேண்டிய நிகழ்வு. தமிழ் உணர்வாளர்கள் காதுகளில் இன்பத்தேன் வந்து பாய்ந்தது இன்று.

தமிழ்நாட்டில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் எனும் நிலை வர வேண்டும் !. தமிழ் மக்களுக்கான சேவைகள் அனைத்தும் முதன்மையாக தமிழில் வழங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் மட்டுமே அறிந்தவர்களுக்கு எந்த மொழிச்சிக்கலும் இல்லா வண்ணம் நடத்தப்படுவதே சிறந்த மக்களாட்சி !.

இது சிலருக்குக் கசப்பாக இருக்கக் கூடும்.'தமிழ்நாட்டில் தமிழ்' என்றுதானே கேட்கிறோம். ஆந்திராவில் தமிழ், கர்நாடகத்தில் தமிழ்,கேரளத்தில், ம.பி, உ.பி, பஞ்சாப், ஹரியானாவில் ஆட்சிமொழி தமிழென்றா கேட்கிறோம். அப்புறம் ஏன் கசக்க வேண்டும்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகமே. நம் உரிமைகளை விட்டுக் கொடுத்துவிட்டு, யாரையும் வாழ வைக்க வேண்டிய அவசியம் நமக்கில்லை என அறிக. நம் மொழிப்பற்றை, மொழி வெறியாகத் திரித்தால் அது திரிப்பவர்களின் பிரச்சினை, நம் பிரச்சினையில்லை.

பி.கு : அப்படியே இந்த வங்கிப்பணி, தொடர்வண்டி சேவை, விமானநிலையம் உள்ளிட்ட அனைத்திலும் தமிழை, தமிழரை உறுதிப்படுத்துக. தமிழ்நாட்டிலிருந்து கிளம்பும்/அடையும் அனைத்து வானூர்திகளிலும் தமிழ் அறிவிப்புகள் ஒலிக்க வேண்டும். உங்களால் முடியும் முதல்வரே !. அடித்து ஆடுங்கள்.