1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 16 மார்ச் 2020 (21:23 IST)

விடுமுறை என்பதால் யாரும் சுற்றுலா சென்றுவிடக்கூடாது: முதல்வர் பழனிச்சாமி

நாளை முதல் மார்ச் 31ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், கல்வி மையங்கள், அங்கன்வாடி மையங்கள், டாஸ்மாக் கடைகள் ஆகியவை மூடப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இதுகுறித்து கூறியபோது, ’கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்திருப்பதாலும், சில தனியார் நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணிசெய்ய பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாலும் பொதுமக்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வாய்ப்பு இருப்பதாக தவறாக கருதி வெளியில் சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்று கூறியுள்ளார்.
 
மேலும் சுற்றுலா பயணியர் தங்குமிடம் அனைத்தும் 31.3.2020 வரை மூடப்பட வேண்டும் என்றும், சுற்றுலா பயணியர் தங்குமிட உரிமையாளர்கள் எவ்வித முன்பதிவும் 31.3.2020 வரை செய்யக் கூடாது என்றும், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் அனைத்து அரசு அலுவலகங்களும் வழக்கம் போல் செயல்படும் என்றும் பணியாளர்கள் சானிடைசர் கொண்டு கையை சுத்தப்படுத்தி கொண்டு அலுவலகத்தில் வேலை பார்க்கலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.