செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 3 செப்டம்பர் 2020 (10:42 IST)

அரசியல் கார்ட்டூன் போட்ட தேமுதிக பிரபலம் சுதீஷ்; சர்ச்சையானதால் எஸ்கேப்!

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேமுதிக துணை செயலாளர் எல்கே சுதீஷ் பதிவிட்ட கார்ட்டூன் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதத்தில் நடைபெற உள்ளது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இம்முறை தேமுதிக தனித்து நின்று போட்டியிட ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இதுகுறித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த் அதிமுக, திமுக இரு கட்சிகளும் கூட்டணிக்கு தங்களோடு பேசி வருவதாகவும், தேமுதிக ஆதரவு இல்லாமல் எந்த கட்சியும் பெரும்பான்மை பெற முடியாது என்றும் பேசியிருந்தார்.

இந்நிலையில் தேமுதிக துணை செயலாளர் எல்கே சுதீஷ் தனது ட்விட்டரில் கார்ட்டூன் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் விஜயகாந்த் காலில் விழுவது போன்ற சித்திரம் உள்ளது. தேமுதிகவின் கூட்டணியை பெற தமிழக அரசியல் கட்சிகள் பேசி வருவதாக பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்த நிலையில், அதை மையப்படுத்தி அவர் இந்த படத்தை பதிவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது.

அரசியல் தலைவர்களை அவமதிக்கும் வண்ணம் கார்ட்டூன் வெளியிட்டுள்ளதாக மற்ற கட்சியினர் சுதீஷுக்கு கண்டனம் தெரிவிக்க. உடனே பதிவை நீக்கிட சுதீஷ் தான் அதை தவறான நோக்கத்தில் பதியவில்லை. அது தான் வரைந்தது அல்ல பிரபல நாளிதழில் 2016ல் வெளியானது. அரசியல் தலைவர்களை அவமதிக்கும் வகையில் அந்த கார்ட்டூன் உள்ளது என்பதை காட்டவே பதிவிட்டேன் என கூறியுள்ளார்.