8-ஆம் வகுப்பு புத்தகத்திலும் கருணாநிதி பற்றிய பாடம்..!
8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்திலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றிய பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு பாடப்புத்தகத்தில் சேர்க்கப்படும் என திமுக தலைமையிலான தமிழக அரசு அறிவித்தது. கடந்த ஆண்டு 9-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைப்பதற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பாடமாகச் சேர்க்கப்பட்டன.
பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் நடப்பாண்டில் உரைநடை பகுதியில் "பன்முகக் கலைஞர்" என்ற தலைப்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பல்வேறு திறன்கள் குறித்தும், தமிழ் மற்றும் கலைத்துறையில் செய்த பணிகள் குறித்தும் 5 பக்கங்கள் கொண்ட பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்திலும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றிய பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. பெண் உரிமை சார்ந்த திட்டங்கள் என்ற தலைப்பில் பாடப்பகுதி இடம் பெற்றுள்ளது.
கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட பெண்களுக்கு சொத்தில் சம உரிமை சட்டம் குறித்து இடம் பெற்றுள்ளது. கை ரிக்ஷா ஒழிப்பு திட்டம், மதிய உணவு திட்டம், சுயமரியாதை திருமண சட்டம், விலையில்லா மிதிவண்டி திட்டம் உள்ளிட்டவையும் இப்பகுதியில் இடம் பெற்றுள்ளன.