”அசம்பாவிதத்திற்கு தலைவர்களே பொறுப்பு”.. நீதிமன்றம் கறார்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு திமுக கூட்டணி கட்சிகள் இன்று பேரணி நடத்தவிருக்கும் நிலையில் , அசம்பாவிதங்கள் நடந்தால் தலைவர்கள் தான் பொறுப்பை ஏற்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் பல வன்முறைகளும் அரங்கேறின. அதில் பஸ்கள், வேன்கள் கொளுத்தப்பட்டன.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் திமுக கூட்டணி குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பேரணி நடத்தவுள்ளதாக முடிவெடுக்கப்பட்டது. இதனிடையே ”போலீஸாரின் முறையான அனுமதி பெறாமல் திமுக கூட்டணி பேரணி நடத்தவுள்ளதாகவும், அதனை தடை செய்யவேண்டும் எனவும் இந்திய மக்கள் மன்றத் தலைவர் வராகி, மற்றும் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வழக்கு தொடுத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், “ஜனநாயக நாட்டில் அமைதியான முறையில் ஊர்வலம் நடத்த அனைவருக்கு உரிமை உண்டு. ஆனால், பொது சொத்துக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு தலைவர்கள் தான் பொறுப்பாக வேண்டும்” என இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.