வெள்ளி, 14 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: வெள்ளி, 20 ஜூன் 2025 (09:04 IST)

இவங்க அடங்க மாட்டாங்க போல! மீண்டும் சென்னை விமானம் மீது லேசர் ஒளி! - தொடரும் விஷமம்!

இவங்க அடங்க மாட்டாங்க போல! மீண்டும் சென்னை விமானம் மீது லேசர் ஒளி! - தொடரும் விஷமம்!

சென்னை விமான நிலையம் வரும் விமானங்கள் மீது லேசர் ஒளி பாய்ச்சப்படும் சம்பவம் தொடர்கதையாகி வரும் நிலையில் இது விமானிகளுக்கும் பெரும் பிரச்சினையாக மாறி வருகிறது.

 

சமீபமாக விமான விபத்துகள், தொழில்நுட்ப கோளாறுகள் என விமானத்துறை பல சிரமங்களை சந்தித்து வருகிறது. இதனால் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை சோதனை செய்து பாதுகாப்பான முறையில் மக்கள் பயணம் செய்திட வழிவகுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் சமீபமாக சென்னையில் தொடரும் ஒரு விஷம வேலை விமானிகளுக்கு பெரும் பிரச்சினையாக மாறி வருகிறது.

 

சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் மீது பரங்கிமலை உள்ளிட்ட அருகாமை பகுதிகளில் இருந்து பச்சை நிற லேசர் ஒளி அடிக்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு மூன்று முறை இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், சென்னை விமான நிலைய நிர்வாகம் இதுதொடர்பாக எச்சரிக்கையையும் வெளியிட்டிருந்தது. அதில் இதுபோன்ற லேசர் ஒளிகள் விமானிகளுக்கு தொந்தரவை அளிக்கும், பயணிகளுக்கு இதனால் ஆபத்து ஏற்படலாம் எனவே இதை செய்யக் கூடாது எனவும் அறிவுறுத்தியது.

 

ஆனால் நேற்று இரவும் நான்காவது முறையாக அதுபோல மீண்டும் சென்னை வந்த விமானம் ஒன்றின் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டுள்ளது. இந்த விஷம செயலை செய்பவர்கள் யார் என்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது. காடு, மலை பகுதிகளில் பயணிப்பவர்கள் சிக்கிக் கொண்டால் தாங்கள் இருக்கும் இடத்தை வெளிக்காட்டுவதற்காக உபயோகிக்கப்படுவதுதான் இந்த பச்சை லேசர் லைட்டுகள், இவை ஆன்லைனிலும், கடைகளிலும் நேரடியாகவே விற்பனைக்கு கிடைக்கும் நிலையில் அதை சிறுவர்களும், இளைஞர்களும் வாங்கி அதன் பயன்பாடு புரியாமல் விளையாட்டாக பயன்படுத்துவது அதிகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K