அவங்க போராட்டத்துக்கு அனுமதி; எங்களுக்கு மட்டும் தடையா? – எல்.முருகன் ஆவேசம்!
சிதம்பரத்தில் திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டதற்கு பாஜக தலைவர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மனுதர்ம சாஸ்திரத்தில் பெண்கள் குறித்து இழிவாய் சொல்லப்பட்டிருப்பதாக திருமாவளவன் பேசிய வீடியோ சர்ச்சைக்குள்ளான நிலையில், பெண்கள் குறித்து தவறாக பேசிய திருமா மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவில் சமீபத்தில் இணைந்த குஷ்பூ கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிதம்பரத்தில் திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் செய்ய பாஜக முயன்ற நிலையில் போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், போராட்டத்திற்கு சென்ற குஷ்பூவும் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர் “திமுகவினர் இடஒதுக்கீடு தொடர்பாக ஆளுனர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டபோது யாரும் கைது செய்யப்படவில்லை. போராட்டமும் தடுக்கப்படவில்லை. ஆனால் பாஜகவின் அறவழி போராட்டத்திற்கு தடை விதித்தது கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டாலும் பாஜக மகத்தான வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.