மன்னிப்புக் கடிதம் கொடுத்த கௌசல்யா – மீண்டும் அரசு வேலை !
இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசுவதாக அரசு வேலையில் இருந்து நீக்கப்பட்ட உடுமலைப்பேட்டை கௌசல்யா மன்னிப்புக் கடிதம் கொடுத்து மீண்டும் அரசு வேலையில் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த 2016 ஆம் ஆண்டு சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட சங்கர், கௌசல்யா தம்பதியினர் மீது கௌசல்யாவின் உறவினர்கள் கொடுரமாக தாக்குதல் நடத்தினர். இதில் சங்கர் படுகொலை செய்யப்பட்டார். கௌசல்யா சில வெட்டுக் காயங்களுடன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். தமிழகம் முழுவதும் இந்த ஆணவப்படுகொலை பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.அதன் பின்னர் கௌசல்யாவுக்கு மத்திய அரசு பாதுகாப்புத் துறையின் கீழ் பணி வழங்கியது.
சங்கர் பெயரில் ஆவணக்காப்பகம் உருவாக்கி கௌசல்யா ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். இவர் சமீபத்தில் சக்தி என்ற பறையிசைக் கலைஞரை மறுமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அவர் பேட்டி அளிக்கையில், இந்தியாவையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் மிகக் கடுமையாக விமர்சித்தார். இதனால் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கௌசல்யா குன்னூர் வெலிங்டன் கண்டொன்மெண்ட் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடந்து சில மாதங்களுக்குப் பிறகு இப்போது கௌசல்யா மத்திய அரசிடம் மன்னிப்புக்கடிதம் எழுதிக்கொடுத்து விட்டு மீண்டும் அந்தப் பணியில் இணைந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.