குரங்கணி காட்டுத் தீ விபத்து - மே 2-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
குரங்கணி காட்டுத் தீ விபத்து குறித்த வழக்கின் விசாரணையை தேசிய பசுமை தீர்ப்பாயம் மே 2-ந் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
போடி அருகே மேற்கு தொடர்ச்சி மலையான குரங்கணி மலைப்பகுதியிலுள்ள ஒத்தமரம் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் மலையேற்ற பயிற்சிக்கு சென்று திரும்பி கொண்டிருந்த 36 பேர் சிக்கினர். இதில் 23 பேர் பலியாயினர்.
தமிழக சட்டசபையில் தீ விபத்து குறித்து நீதி விசாரணை செய்து 2 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்திட உத்தவிடப்பட்டுள்ளது. அதன்படி ஐ.ஏ.எஸ் அதிகாரி அதுல்யமிஸ்ரா சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
குரங்கணி காட்டுத் தீ விபத்து குறித்து நேற்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரனை நடைபெற்றது. அப்போது தமிழக அரசின் வக்கீல் ராகேஷ் சர்மா ஆஜராகி இந்த சம்பவம் குறித்த தமிழக அரசின் அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதில் விபத்து குறித்து விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதால் அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 2 மாத கால அவகாசம் தேவை என கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கின் மீதான விசாரணையை மே 2-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.