திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (13:32 IST)

பணம் இல்லை என திமுக என்னை ஒதுக்கியது: கு.க.செல்வம் பகீர் பேட்டி!

திமுகவில் வளர்ச்சி இல்லை என்பதால் விலக முடிவு செய்தேன் என கு.க.செல்வம் தெரிவித்துள்ளார். 
 
சென்னை ஆயிரம் விளக்கும் திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் டெல்லிக்கு சென்று பாஜக தலைவர்களை சந்தித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் திரும்பவந்த கு.க.செல்வம் தான் பாஜகவில் இணையவில்லை என்றும், தொகுதி மேம்பாடு குறித்து பேச சென்றதாகவும் கூறினார். 
 
ஆனால் கு.க.செல்வம் டெல்லி சென்றது திமுக தலைமைக்கே தெரியாது என கூறப்படுகிறது. எனவே கு.க.செல்வத்தை திமுகவின் பொறுப்புகளிலிருந்து தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டார் மு.க.ஸ்டாலின். அதன்படி கு.க.செல்வம் திமுக தலைமை நிலைய செயலாளர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.  
 
இதனைத்தொடர்ந்து சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்திற்கு சென்ற கு.க.செல்வம் அங்குள்ள ராமர் திருவுறுவத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, திமுக என்னை பதவியிலிருந்து நீக்கினால் எனக்கு கவலை இல்லை. திமுகவில் வாரிசு அரசியல் குடும்ப அரசியலாக மாறிவிட்டது என பேசி பரபரப்பை கூட்டினார். 
 
இதனைத்தொடர்ந்து அவர் தற்போது அளித்துள்ள பேட்டியில், திமுகவில் இருக்க பிடிக்கவில்லை என்பதால் பொறுப்பை நீக்கிக்கொள்ளுங்கள் என கூறிவிட்டேன். மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்காதது காரணமல்ல. கட்சியில் உள்ள குடும்ப அரசியல் காரணமாகவே விலகுகிறேன்.
 
திமுகவில் வயதாகிவிட்ட, உடல்நிலை சரியில்லை, பணம் இல்லை என என்னை ஒதுக்கினார்கள். திமுகவில் வளர்ச்சி இல்லை என்பதால் விலக முடிவு செய்தேன் என கு.க.செல்வம் தெரிவித்துள்ளார்.