பண்ணை வீட்டில் தோட்டா தொழிற்சாலை!?? – திமுக எம்.எல்.ஏ வழக்கில் திருப்பம்!
திருபோரூர் திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் தனது பண்ணை வீட்டில் முறைகேடாக தோட்டா தொழிற்சாலை நடத்தி வந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் திருபோரூரில் நில விவகாரம் ஒன்றில் திமுக எம்.எல்.ஏ இதயவர்மனுக்கும், குமார் என்பவருக்கும் எழுந்த மோதலில், இதயவர்மன் குமாரை துப்பாக்கியால் சுட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இருதரப்பினரையும் போலீஸார் கைது செய்துள்ள நிலையில் அதிர்ச்சிக்குரிய விஷயங்கள் வெளிவர தொடங்கியுள்ளன.
இதுகுறித்து நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையில் போலீஸ் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் இதயவர்மன் வைத்திருந்த இரண்டு துப்பாக்கிகளுக்குமான லைசென்ஸ் 2019உடன் காலாவதியாகிவிட்டது என தெரிவித்துள்ளனர். மேலும் இதயவர்மன் தனது பண்ணை வீட்டில் அனுமதியின்றி துப்பாக்கிகளுக்கான தோட்டா செய்யும் தொழிற்சாலையை நடத்தி வந்ததாகவும், இதுகுறித்த விசாரணையில் இதயவர்மன் தரப்பினர் போதிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்றும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் எம்.எல்.ஏ இதயவர்மனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என கோரப்பட்ட நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.