கழகத்தில் குடும்ப ராஜ்ஜியம்; குமுறும் தொண்டர்கள்: ஜெயகுமார் வேதனை!

Sugapriya Prakash| Last Modified வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (11:46 IST)
திமுக குடும்ப ராஜ்ஜியத்தின் அதிருப்தியால், அக்கட்சி தொண்டர்களின் குமுறுவதாக அதிமுக அமைச்சர் ஜெயகுமார் கருத்து. 
 
சென்னை ஆயிரம் விளக்கும் திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் டெல்லிக்கு சென்று பாஜக தலைவர்களை சந்தித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் திரும்பவந்த கு.க.செல்வம் தான் பாஜகவில் இணையவில்லை என்றும், தொகுதி மேம்பாடு குறித்து பேச சென்றதாகவும் கூறினார்.
 
ஆனால் கு.க.செல்வம் டெல்லி சென்றது திமுக தலைமைக்கே தெரியாது என கூறப்படுகிறது. எனவே கு.க.செல்வத்தை திமுகவின் பொறுப்புகளிலிருந்து தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டார் மு.க.ஸ்டாலின். அதன்படி கு.க.செல்வம் திமுக தலைமை நிலைய செயலாளர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 
 
இதனைத்தொடர்ந்து சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்திற்கு சென்ற கு.க.செல்வம் அங்குள்ள ராமர் திருவுறுவத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, திமுக என்னை பதவியிலிருந்து நீக்கினால் எனக்கு கவலை இல்லை. திமுகவில் வாரிசு அரசியல் குடும்ப அரசியலாக மாறிவிட்டது என பேசி பரபரப்பை கூட்டினார். 
 
இந்நிலையில் இது குறித்து அதிமுக அமைச்சர் ஜெயகுமாரிடன் கேள்வி எழுப்பிய போது அவர் பின்வருமாறு பதில் அளித்தார், அதிமுக ஜனநாயகம் தழைத்து ஓங்கும் கட்சி. திமுக ஒரு குடும்ப ராஜ்ஜியம். அந்த குடும்ப ராஜ்ஜியத்தின் அதிருப்தியால், கட்சி தொண்டர்களின் குமுறல் வெளிப்பாட்டால் தான் கு.க.செல்வம் வெளியே வந்துள்ளார். அவரை தொடர்ந்து தேர்தல் நேரத்தில் நிறையபேர் வெளியே வருவார்கள். அதன் தொடக்கம் தான் கு.க.செல்வம் வெளியேற்றம் என கூறியுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :