விவேக், கிருஷ்ணப்பிரியா அளித்த பேட்டி - தினகரன் ஷாக்
தன்னுடைய இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்த விவகாரம் பற்றி சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா கருத்து தெரிவித்துள்ளார்.
சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வீடுகளில், ஆபரேஷன் கிளீன் மணி என்ற பெயரில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் சசிகலா குடும்பத்தினர் பினாமிகள் பெயரில் வாங்கிய சொத்துக்கள், முறைகேடான பணப்பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களும் சிக்கியது.
இதில், இளவரசியின் மகன் விவேக் மற்றும் மகள் கிருஷ்ணபிரியா ஆகியோரின் வீட்டில் மட்டும் அதிகாரிகள் 5 நாட்கள் சோதனை நடத்தினர். சசிகலா பரோலில் வந்த போது கிருஷ்ணபிரியாவின் வீட்டில்தான் தங்கினார். அப்போது ரூ.500 கோடி மதிப்புள்ள சொத்துகள் சிலரின் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், கிருஷ்ணபிரியாவிற்கு முக்கிய தொடர்பு இருப்பதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில், கிருஷ்ணப்பிரியாவும், அவரது சகோதரி ஷகிலா மற்றும் அவர்களது கணவர்கள் அனைவரும் இன்று வருமான வரித்துறை அலுவலகத்திற்கு நேரில் வந்து விசாரணையில் கலந்து கொண்டனர். இதில், ஷகிலா மிடாஸ் மதுபான ஆலையை நிர்வகிப்பதில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விசாரணை முடிந்து வெளியே வந்த கிருஷ்ணப்பிரியா “ வருமான வரி சோதனை என்பது வழக்கமாக நடைபெறும் ஒன்றுதான். இதில் ஏன் அரசியலுடன் முடிச்சு போடுகிறீர்கள்?. என் வீட்டில் இருந்து எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. சோதனைக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். அதிகாரிகள் அவர்களது கடமையை செய்தனர்” எனக் கூறிவிட்டு சென்றார். இதே கருத்தைதான் கிருஷ்ணப்பிரியாவின் சகோதரர் விவேக்கும் கூறினார்.
ஆனால், இந்த சோதனை குறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்த டிடிவி தினகரன், நிச்சயமாக அரசியல் காரணுங்களுக்காகவே இந்த சோதனை நடைபெற்றுள்ளது. எங்களை மிரட்டிப் பார்க்கவே மத்திய அரசு முயல்கிறது. ஆனால், நாங்கள் யாருக்கும் பயப்படப்போவதில்லை” எனக் கருத்து கூறியிருந்தார்.
ஆனால், அவரின் உறவினர்களான விவேக்கும், கிருஷ்ணப்பிரியாவும் அவரின் கருத்திற்கு நேர் எதிரான கருத்துகளை தெரிவித்திருப்பது தினகரனை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.