ஜெ. இருந்திருந்தால் மெரினாவில் இடம் கொடுத்திருப்பார் : கிருஷ்ணபிரியா
மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால், திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி அளித்திருப்பார் என சசிகலாவின் உறவினரான இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா கருத்து தெரிவித்துள்ளார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாசமாதிக்கு அருகிலேயே நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை விடுத்தது. ஆனால், சட்ட சிக்கல்கள் இருப்பதாக கூறி, கிண்டி காமராஜர் நினைவிடத்தில் அவரை உடலை புதைக்க அரசு நிலம் ஒதுக்கியது. இது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் விரைவில் தீர்ப்பை அளிக்கவுள்ளது.
இந்நிலையில், ஜெ.வின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலாவின் உறவினரான இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா தனது முகநூலில் “அம்மா உயிருடன் இருந்திருந்தால், கண்டிப்பாக, கலைஞர் அவர்களுக்கு அறிஞர் அண்ணாவிற்கு அருகில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கும் என்பது திண்ணம். அம்மாவை அரசியல்வாதியாக மட்டுமே தள்ளி நின்று பார்த்தோர்க்கு இது தெரியவும் வாய்ப்பில்லை” என பதிவிட்டுள்ளார்.