1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 20 ஏப்ரல் 2017 (18:06 IST)

அவர்கள் வேண்டாம் ; கே.பி. முனுசாமி போர்க்கொடி ; இரு அணிகள் சேர்வதில் சிக்கல்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் பேச்சு வார்த்தை நடத்துவதை அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
தினகரனை கட்சியிலிருந்து விலக்குவது என அதிமுகவின் முக்கிய அமைச்சர்கள் முடிவெடுத்து விட்டனர். தினகரனும் விலகிக் கொண்டார். தற்போது யாருக்கு முதல்வர் பதவி? யார் பொதுச்செயலாளர்? மற்றும் அமைச்சரவையில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து இரு அணிகளும் நாளை கூடி விவாதிக்க உள்ளனர். 
 
இந்நிலையில் ஓ.பி.எஸ் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ள கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களிடம் அவர் கூறும் போது “அதிமுகவிலிருந்து சசிகலா குடும்பம் வெளியேற வேண்டும் என்பதுதான் எங்களின் முக்கிய கோரிக்கை. எனவே, அவர்கள் இருவரிடமும் ராஜினாமா கடிதம் பெற்று கழக அறிக்கையாக வெளியிட வேண்டும். 
 
ஏனெனில், சசிகலாவால் நியமிக்கப்பட்டதுதான் எடப்பாடி பழனிச்சாமி அரசு. அந்த அணியில் உள்ள அனைவரும் ஊழலில் திளைத்தவர்கள். பதவிக்காக தற்போது மக்கள் செல்வாக்கு இருக்கும் ஓ.பி.எஸ் பக்கம்  சேரத் துடிக்கிறார்கள். மேலும், முதல்வர் பதவியை நாங்கள் கேட்கவில்லை. இந்நிலையில், தம்பிதுரை உள்ளிட்டோர் தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர் ” எனக் கூறியுள்ளார். 
 
இரு அணிகளும் சேர்ந்து நாளை பேச்சுவார்த்தை நடத்தவுள்ள வேளையில், ஓ.பி.எஸ் அணியில் உள்ள முக்கிய நபரான கே.பி. முனுசாமி இப்படி கருத்து தெரிவித்துள்ளது, திடீர் திருப்பமாக பார்க்கப்படுகிறது.