எம்.பி. கதிர் ஆனந்த்துக்கு வருகிறது இன்னொரு முக்கியப் பதவி !

Last Modified செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (11:40 IST)
வேலூர் தொகுதி மக்களவைத்  தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர் கதிர் ஆனந்துக்குக் கட்சியில் மற்றுமொரு முக்கியமானப் பதவியும் வழங்கப்பட இருக்கிறது.

வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.பி. யாகியுள்ளார். இதையடுத்து தன்னைப் பார்த்து வாழ்த்து சொல்ல வருபவர்களிடம் எல்லாம் முக மலர்ச்சியோடு இனி வேலூர் பகுதியில் திமுகவின் முகம் கதிர் ஆனந்துதான் என கூறிவருகிறாராம் துரை முருகன்.
அதுமட்டுமல்லாமல் கட்சியிலும் அவருக்கு முக்கியமானப் பதவியைப் பெறும் முனைப்பில் உள்ளதாகத் தெரிகிறது. மறுசீரமைக்கப்பட்டு வரும் இளைஞரணியில் கதிர் ஆனந்துக்கு வேலூர் மாவட்ட பொறுப்புக் கிடைக்கும் எனவும் செய்திகள் உலாவர ஆரம்பித்துள்ளன.

இளைஞரணிக்குப் பொறுப்பேற்றதன் பின்னர் முதல் முறையாக வரும் 25 ஆம் தேதி இளைஞரணியின் மாவட்ட அமைப்பாளர்கள், மாநில அமைப்பாளர்கள் கூட்டத்தை சென்னையில் நடத்துகிறார் உதயநிதி ஸ்டாலின். அந்தக் கூட்டத்தில் கதிர் ஆனந்தின் பதவி குறித்து அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.இதில் மேலும் படிக்கவும் :