வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு! பாஜகவுக்கு ஒரு வெற்றி உறுதி!

திமுக கூட்டணியில் 10 தொகுதிகளை பெற்ற காங்கிரஸ் கட்சி கடந்த சில நாட்களுக்கு முன் 9 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்களை அறிவித்தது. சிவகங்கை தொகுதி வேட்பாளர் மட்டும் சஸ்பென்ஸில் இருந்த நிலையில் தற்போது அந்த தொகுதியில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்திக் சிதம்பரம் போட்டியிடுவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
வேட்பாளர் அறிவிப்புக்கு பின் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'என்மீதான குற்றச்சாட்டுகள் ஏதும் நிரூபிக்கப்படவில்லை. காங்கிரஸ் பெரிய இயக்கம் என்பதால் வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டது. சிவகங்கை தொகுதியில் திமுக ஆதரவுடன் நிச்சயம் வெற்றி பெறுவேன்' என்று கூறினார்.
 
கார்த்திக் சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் பிரமுகர் சுதர்சனம் கூறியபோது, 'சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரத்தை அறிவித்துள்ளது மக்களுக்கே அதிர்ச்சி அளிக்கிறது. தொகுதிக்கு எந்த நன்மையும் செய்யாமல் வெளிநாடுகளில் சொத்துகளை சேர்த்துள்ளது ப.சிதம்பரத்தின் குடும்பம். ப.சிதம்பரத்தின் குடும்பத்தை மக்கள் வெறுக்கிறார்கள்' என்று கூறியுள்ளார்.
 
சிவகங்கையில் தனது வெற்றி குறித்து கருத்து கூறிய ஹெச்.ராஜா, 'ப.சிதம்பரம் குடும்பமே வழக்குகளை பேக்கேஜாக எடுத்துள்ளது; வழக்குகளில் ஜாமீன் பெற அலைபவர்கள் மக்களுக்கு நல்லது செய்வார்களா? கார்த்தி சிதம்பரம் போன்று என்னிடம் பணபலம் இல்லை என்றாலும் மக்கள் பலத்துடன் வெற்றி பெறுவேன் என்று கூறியுள்ளார். கார்த்திக் சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஹெச். ராஜா வெற்றி உறுதி என்றே அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர்.