பேருந்தில் இருந்த கண்டக்டர் மாயம்! திரும்பி சென்ற டிரைவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
கன்னியாக்குமரியில் பேருந்து ஒன்றில் கண்டக்டர் இல்லாதது தெரியாமல் பேருந்தை டிரைவர் பல கிலோ மீட்டர்கள் ஓட்டி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாக்குமரி மாவட்டம் வடக்கன்குளத்திலிருந்து நாகர்கோவிலுக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. ஆரல்வாய்மொழி அருகே பயணிகள் சிலர் ஏறியபோது டிக்கெட் எடுக்க கண்டக்டரை எதிர்பார்த்துள்ளனர். ஆனால் கண்டக்டரை காணததால் டிரைவரிடம் டிக்கெட் எப்படி எடுப்பது என கேட்டுள்ளனர்.
அப்போதுதான் பேருந்தில் இருந்த கண்டக்டர் மாயமானதை டிரைவர் அறிந்துள்ளார். உடனே பேருந்தை நிறுத்தி விட்டு எதிரே வந்த பைக்கில் லிஃப்ட் கேட்டு பேருந்து வந்த திசையிலேயே சென்றுள்ளார். அப்போது பேருந்து சென்ற வழியில் 5 கிலோ மீட்டர்கள் முன்னால் உள்ள மூப்பந்தல் அருகே கண்டக்டர் மகாலிங்கம் காயங்களுடன் சாலையில் விழுந்து கிடந்தது தெரிய வந்துள்ளது. அவரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பேருந்தில் பயணிகளை ஏற்றிய கண்டக்டர் மகாலிங்கம் படிகளில் நின்று பயணித்ததாகவும், அப்போது அவர் தவறி விழுந்தது தெரியாமல் பேருந்தை டிரைவர் ஓட்டி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.