வீட்டுக்கு போய்ட்டு வாங்க : தொண்டர்களுக்கு கனிமொழி கோரிக்கை

Last Modified திங்கள், 30 ஜூலை 2018 (09:52 IST)
காவேரி மருத்துவமனை வெளியே நிற்கும் திமுக தொண்டர்கள் வீட்டிற்கு செல்லுங்கள் என கனிமொழி எம்.பி. கோரிக்கை வைத்துள்ளார்.

 
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் சற்று நலிவு ஏற்பட்டதால் கடந்த இரண்டு நாட்களாக அவருக்கு காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்நிலையில், நேற்று இரவு அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது.
 
எனவே, நாடெங்கும் பதற்றம் பரவியது. ஏராளமான திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனை அருகே குவிந்தனர். கருணாநிதியின் குடும்பதினர்களான ஸ்டாலின், ராஜாத்தியம்மாள், கனிமொழி, உதயநிதி உள்ளிட்ட பலரும் மருத்துவமனைக்கு வந்தனர். இதனால், அங்கு இருந்த தொண்டர்களிடையே பதற்றம் நிலவியது.
 
ஆனால், மருத்துவர்களின் தீவிர சிகிச்சை காரணமாக அவரது உடல் நிலை சீரானது என இரவு 11 மணிக்கு காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இந்த தகவலை முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவும் உறுதி செய்தார். இதையடுத்து, ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையிலிருந்து வெளியேறினர். அதையடுத்து, அங்கிருந்த திமுக தொண்டர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கூறினர். ஆனாலும், பலரும் அங்கேயே இருந்ததால், போலீசார் லேசான தடி அடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இருப்பினும், பல திமுக தொண்டர்கள் மருத்துவமனை அருகிலேயே இன்னமும் காத்திருக்கிறார்கள். 
 
இந்நிலையில், இன்று காலை கனிமொழி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரித்தார். அதன் பின் வெளியே வந்த அவர் அங்கிருந்த திமுக தொண்டர்களிடம் “தலைவர் நன்றாக இருக்கிறார். அனைவரும் தைரியமாக இருங்கள். அனைவரும் வீட்டிற்கு சென்று உணவருந்திவிட்ட்டு வாருங்கள்” எனக் கூறினார்.
 
அதன்பின், அங்கிருப்பவர்களை கலைந்து செல்லும் படி மருத்துவமனை சார்பிலும் ஒலி பெருக்கி மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்த திமுக தொண்டர்கள் பலர் கலைந்து சென்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :