ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 25 ஜூலை 2024 (14:08 IST)

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம்.. கனிமொழி எம்பி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்..!

kanimozhi
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒருங்கிணைந்த இயக்கத்திட்டம், மாற்று ஆய்வு திட்டம் இன்றி தமிழக அரசு திட்ட அறிக்கை அளித்துள்ளது என மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி எழுப்பிய கேள்விக்கு, மத்திய இணையமைச்சர் தோக்கன் சாஹூ பதில் அளித்துள்ளார்.

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அனுமதி நிலையின் விபரங்கள் குறித்து இன்று மக்களவையில்  திமுக எம்.பி.கனிமொழி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த  மத்திய இணையமைச்சர் தோக்கன் சாஹூ, ‘மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, ஒருங்கிணைந்த இயக்கத் திட்டம், மாற்று ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என தெரிவித்தார்.

ஆனால் தமிழக அரசு, ஒருங்கிணைந்த இயக்கத் திட்டம், மாற்று ஆய்வு திட்டம் இன்றி திட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது என்றும் அவர் விளக்கமளித்தார்.

முன்னதாக மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்தும் வகையில் விரைவில், மத்திய அரசின் ஒப்புதலை பெற்று பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மதுரை திருமங்கலம் – ஒத்தக்கடை இடையே 31.93 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 27 கி.மீ. உயர்மட்டப்பாதையில் 23 மெட்ரோ ரயில் நிலையங்களும், 4.65 கி.மீ. சுரங்கப்பாதையில் 3 மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Edited by Mahendran