மத்திய அரசால் தனிமைப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில் திடீரென கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் உள்ளதாக மத்திய அரசு பட்டியலிட்டுள்ள 80 மாவட்டங்களில் தமிழ்நாட்டின் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இந்த மூன்று மாவட்டங்களையும் தனிமைப்படுத்த சொல்லி மத்திய அரசு தமிழக அரசை அறிவுறுத்திய நிலையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் மூன்று மாவட்ட கலெக்டர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் பொன்னையா காஞ்சிபுரத்தில் உள்ள கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார். அத்தியாவசிய கடைகளான சிறு மளிகை கடைகள், காய்கறி கடைகள் மற்றும் மருந்து கடைகள் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
இவைதவிர பெரிய ஷாப்பிங் கடைகள், உணவகங்கள், நகைக்கடைகள், குளிரூட்டப்பட்ட அறைகளை உடைய கடைகள், துணிக்கடைகள் ஆகியவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மார்ச் 31 வரை இந்த ஆணை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் அதிருப்தியை தொடர்ந்து ஊரடங்கை மாநில அரசுகள் கடுமையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் அரசு காஞ்சிபுரத்தை முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.