இதைதான் பெரியார் மண்ணுன்னு பெருமை பேசுனீங்களா? – கமல்ஹாசன் காட்டம்!
தேனியில் பட்டியலின பெண் ஊராட்சி மன்ற தலைவர் அவமரியாதை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேனி கீழவடகரை பகுதியில் நடந்த ஊராட்சி மன்ற கூட்டத்தில் பட்டியலினத்தை சேர்ந்த பெண் ஊராட்சி தலைவரை தரையில் உட்கார வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்துள்ள நிலையில், இதுகுறித்து பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ”பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்கள் அவமானப்படுத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இது பெரியார் மண் என பெருமை பொங்க பேசுகிறோமே.. இதுதான் பெரியார் போதித்த சமத்துவமா?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், அதிகார வெறி அரசியலில் ஜாதிய கணக்குகள் மேலோங்கி நிற்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.