ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 13 மார்ச் 2018 (12:12 IST)

ரஜினிகாந்த் எந்த கட்சியின் தலைவர்? - கமல்ஹாசன் கேள்வி

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அவரின் கொள்கைகளையும் விமர்சிப்பேன் என நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

 
ரஜினியும், கமல்ஹாசனும் நீண்ட வருட நண்பர்கள். எங்கும், எப்போது, ஒருவரை விட்டுக் கொடுத்து பேசியதில்லை. ஒருவரையொருவர் தவறாக விமர்சித்துக் கொள்வதும் இல்லை. அந்நிலையில்தான், நேற்று செய்தியார்களை சந்தித்த கமல்ஹாசனிடம், காவிரி விவகாரம் குறித்து ரஜினி வாய் திறக்க மறுக்கிறார் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல்ஹாசன் “இதில் மட்டுமல்ல. ரஜினி பல விவகாரங்களில் அப்படித்தான் இருக்கிறார். எனவே அது பற்றி விமர்சிக்க முடியாது” என பதிலளித்தார்.
 
இந்நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சி ஈரோட்டில் நடத்திய விவசாயிகள் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது அவரின் சில கேள்விகள் எழுப்பப்பட்டது. ரஜினியின் ஆன்மிக அரசியல் பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது. 
அப்போது, அரசியல் களத்தில் நீங்கள் ஒரு கட்சியின் தலைவர், ரஜினிகாந்த் ஒரு கட்சியின் தலைவர் என நிரூபர் கேள்வி கேட்க முயல, ரஜினி எந்த கட்சியின் தலைவர் என கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார். அதன் பின் அவர் பேசியதாவது:
 
அவர் வரட்டும், கட்சி  தொடங்கி அதற்குப் பெயர் வைக்கட்டும். நான் 'மக்கள் நலன்' என்று ஒரு வார்த்தையில் கொள்கையை சொல்லியிருக்கிறேன். இதைப்போல அவரும் அவருடைய கொள்கையைச் சொல்லட்டும். அதன்பிறகு இரண்டும் பொருந்துகிறதா என்று பார்ப்போம். அப்படி பொருந்தவில்லை என்றால், அப்பொழுதும் ரஜினியை விமர்சிக்க மாட்டேன். அவருடைய கட்சியின் கொள்கைகளை விமர்சிப்பேன். இது எங்கள் அரசியல் மாண்பு. 
 
தனி நபரை விமர்சிக்க மாட்டோம் என்றுதான் சொல்கிறேன். அப்படி விமர்சிக்கும் கட்சிகள் இங்கே நிறைய இருக்கின்றன. ரஜினி கட்சித் தொடங்கிய பின்னர், அவருடைய கொள்கைகளை அறிந்தபின்னர் அதில் எங்களுக்கு விமர்சனம் இருந்தால் அது கடுமையானதாக இருக்கும். பாராட்டுக்கள் இருந்தால் அது திறந்த மனதுடன் இருக்கும்.
 
என அவர் பதிலளித்தார்.