வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 6 மே 2021 (08:29 IST)

தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம்… ஸ்டாலினுக்கு கமல் கோரிக்கை!

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா அச்சத்தைப் பயன்படுத்தி நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக கமல்ஹாசன் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இது சம்மந்தமாக பதவியேற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘எரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம் என சில தனியார் மருத்துவமனைகள் மருத்துவக் கட்டணங்களைப் பல மடங்கு உயர்த்தியுள்ளன. லட்சக்கணக்கான ரூபாய் முன்பணமாகச் செலுத்தினால்தான் அனுமதி. அப்படிச் செலுத்தும் பணத்தில் பாதியைக் கணக்கில் வராத கறுப்புப் பணமாகத் தர வேண்டும். ரசீது கிடையாது. எப்போது கிளம்பச் சொன்னாலும், டிஸ்சார்ஜ் சம்மரி இல்லாமலேயே கிளம்பி விட வேண்டும் என அடாவடி செய்கிறார்கள். எவ்வளவு பணம் கொடுத்து வேண்டுமானாலும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பணம் படைத்தவர்கள் தயாராக இருப்பதால், இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு பகற்கொள்ளை அடிக்கின்றனர்.

நுரையீரல் தொற்று எந்த அளவுக்கு உள்ளது என்பதைத் தெரிந்துகொள்வதற்கான சிடி ஸ்கேன் கட்டணம் ரூ.1500/-ல் தொடங்கி ரூ.8,000/- வரை விதம்விதமாக வசூலிக்கப்படுகிறது. ஆர்டிபிசிஆர் சோதனைக்கு ரூ.3,000/- தொடங்கி ரூ.10,000/- வரை வசூலிக்கிறார்கள். இப்படியாக கொரோனா சிகிச்சையின் ஒவ்வொரு அலகிலும் கொள்ளை நிகழ்கிறது.ஒரு மருத்துவரின் சேவைக்கான கட்டணம் அவரது கல்வி, அனுபவம், திறமையைப் பொறுத்து மாறுபடலாம். ஆனால், மருத்துவப் பரிசோதனைகள், மருந்து மாத்திரைகள், உபகரணங்கள், தடுப்பூசிகள், ஆக்சிஜன் சிலின்டர்கள், ஆம்புலன்ஸ் என ஒவ்வொன்றும் தமிழகம் முழுக்க வெவ்வேறு கட்டணங்களில் பன்மடங்கு வசூலிக்கப்படுகிறது.

அமையவிருக்கும் புதிய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு கொரோனா சிகிச்சைக்கான கட்டணங்களை நெறிப்படுத்த வேண்டும். அதிகபட்ச விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும். கொள்ளை நோய் காலத்தில் எல்லாவிதமான மருத்துவ நடைமுறைகளும், சேவைகளும் தரப்படுத்தப்பட்டு ஒரே மாதிரியான கட்டணமே தமிழகம் முழுக்க உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் நிர்ணயிக்கப்பட வேண்டும். தமிழக முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள மு..ஸ்டாலின் இதை உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும்எனக் கூறியுள்ளார்